Header ad

Breaking News

மகாராஷ்டிரத்தில் மீண்டும் மீண்டும் திடீர் திருப்பம்.. தேசியவாத காங்கிரஸில் பிளவு

மகாராஷ்டிரத்தில் மீண்டும் மீண்டும் திடீர் திருப்பம்.. தேசியவாத காங்கிரஸில் பிளவு


மும்பை: மகாராஷ்டிரத்தில் அடுத்தடுத்து திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் நேற்று வரை காங்கிரஸ்- என்சிபி- சிவசேனா கூட்டணி அமைத்து அதில் உத்தவ் தாக்கரே முதல்வராவார் என எதிர்பார்க்கப்பட்டது. சுழற்சி முறையில் முதல்வர் பதவி கேட்டு சமாதானம் அடைந்த பவார், உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய ஆட்சி மலரும் என நேற்றைய தினம் பேட்டி அளித்தார். இந்த நிலையில் திடீர் திருப்பமாக பாஜக- என்சிபி கூட்டணி உருவானது. இதையடுத்து முதல்வராக தேவேந்திர பட்னவீஸும் துணை முதல்வராக அஜித் பவாரும் பதவியேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன என்பது போல் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த நிலையில் செய்தியாளர்களை சரத்பவார் சந்தித்தார். அவர் கூறுகையில் பாஜகவுடன் கூட்டணி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவல்ல.

பாஜகவுடன் இணைந்து கூட்டணி அமைத்திருக்கும் அஜித் பவாரின் முடிவுக்கு ஆதரவு இல்லை. துணை முதல்வராக பதவியேற்றது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு என்றார் சரத்பவார். மகாராஷ்டிரத்தில் புதியதாக ஆட்சி பொறுப்பேற்ற சிறிது நேரத்தில் சரத்பவார் இவ்வாறு அறிவித்துள்ளார்.

ஒரு நாள் இரவில் மகாராஷ்டிரத்தின் காட்சிகள் அனைத்தும் மாறிவிட்டன. காலை விடிந்தும் விடியாமல் மகாராஷ்டிரத்தில் பாஜக- என்சிபி கூட்டணி அமைத்தது திடீர் திருப்பம் என்றால், பாஜகவுக்கு ஆதரவு அளித்தது என்சிபியின் முடிவல்ல என தெரிவித்துள்ளது மற்றொரு திருப்பமாக பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிர தேர்தலில் என்சிபிக்கு 54 இடங்கள் கிடைத்தன. அஜித் பவாருக்கு என்சிபியை சேர்ந்த 22 என்சிபி எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக சொல்லப்படுகிறது. இத்துடன் சிவசேனா எம்எல்ஏக்களும் தொடர்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

No comments