Header ad

Breaking News

கொரோனா பூஸ்டர் டோஸ்..18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் இலவசம்

 கொரோனா பூஸ்டர் டோஸ்..18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் இலவசம்



சென்னை: நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி இன்று முதல் செப்டம்பர் 28ஆம் தேதி வரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளன.

நாட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்கொள்ள கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் பெரிதும் உதவி வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி தொடங்கிய தடுப்பூசி திட்டம் பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கோவிட் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இவர்களுக்கு மத்திய அரசே இலவசமாக கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது.

இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் நாடுமுழுவதும் இதுவரை 199.12 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,15,068 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.


இதனைத் தவிர 2 முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது.

தனியார் மையங்களில் இத்தகைய பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. அதன்படி, தனியார் மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை கட்டணம் செலுத்தியே போட முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் அடுத்த 75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகும் நிலையில் அடுத்த 75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில் ''இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி வரும் ஜூலை 15 முதல் 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்றார்.

அதன்படி இன்று முதல் செப்டம்பர் 28ஆம் தேதி வரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளன.

No comments