Header ad

Breaking News

16 காளைகளை அடக்கி கார் பரிசு பெற்ற மாடுபிடி வீரர் உருக்கம்

16 காளைகளை அடக்கி கார் பரிசு பெற்ற மாடுபிடி வீரர் உருக்கம்

‘‘என் சுவாசமே ஜல்லிக்கட்டுதான், ’’ என்று பாலமேடு ஜல்லிக்கட்டுப்போட்டியில் 16 காளைகள் அடக்கிய மாடுபிடி வீரர் பிரபாகரன் உணர்ச்சி பொங்க உருக்கமாக தெரிவித்தார்.

அலங்காநல்லூருக்கு அடுத்து பிரசித்திபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் களம் இறங்குவதையும், பரிசுகள் வெல்வதையும் மாடுபிடி வீர்களும், காளை உரிமையாளர்களும் பெருமையாக கருதுவார்கள். அதனால், இந்த போட்டியில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து தயாரிப்புடன் மாடுபிடி வீரர்கள், காளை வளர்ப்போர் பங்கேற்பார்கள்.

இதில், ஒரு சில காளைகளை அடக்குவதே மாடுபிடி வீரர்கள் பெரிய விஷயமாக கருதுவார்கள். ஆனால், இன்று நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டில் பொதும்பை சேர்ந்த பிரபாகரன்(24), என்ற இளைஞர் 16 காளைகளை அடக்கியுள்ளார். இவருக்கு மாருதி சுசுகி இக்னிஸ் கார் பரிசாக வழங்கப்பட்டது. இவர் 9-ம் வகுப்பு வரைதான் படித்துள்ளார். கூலிவேலைக்கு சென்று வருகிறார். 6 ஆண்டிற்கு முன் தந்தை இறந்துவிட்டார்.

இவரது தாய், அக்கம் பக்கத்தில் வீட்டு வேலை செய்து வருகிறார். மிகவும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த பிரபாகரனக்கு ஜல்லிக்கட்டு மீது தீராத காதல். 18 வயதில் இருந்து விளையாட ஆரம்பித்த பிரபாகரன், கடந்த 5 ஆண்டாக தமிழகம் முழுவதுமே நடக்கும் ஜல்லிக்கட்டுப்போட்டியில் வெற்றி மேல்வெற்றிகளை குவித்து வருகிறார்.

இன்னும் இவருக்கு திருமணம் ஆகவில்லை. பாலமேடு, அலங்காநல்லூரில் சிறந்த மாடுபிடி வீரர் என்ற பெருமையை பெற்றப்பிறகுதான் திருமணம் என்ற வைராக்கியத்துடன் இருந்த பிரபாகரன், பாலமேட்டில் சிறந்த மாடுபிடி வீரர் பரிசை பெற்று இந்த ஆண்டு சாதித்துக் காட்டியுள்ளார். புது கார் வாங்கிய உற்சாகத்தில் இந்த ஆண்டு பிரபாகரன் திருமணமும் செய்து கொள்வதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

அவர் நமது ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறுகையில், ‘‘எனக்கு நண்பர்கள்தான் எல்லாமே. பாலமேடு போட்டியில் கார் பெறுவதற்கும் அவர்கள்தான் காரணம். என்டோட மாடுபிடிக்கும் திறமையை பார்த்து நண்பர்கள் ஊக்குவித்தனர். அவர்களுடன் என்னுடன் களம் இறங்கி வாடிவாசலில் காளைகளை பிடிக்க உதவுவார்கள். என் சுவாசமே ஜல்லிக்கட்டுதான்.

14 வயதில் இருந்தே ஊர் ஊராக சென்று ஜல்லிக்கட்டுப்பார்ப்பேன். 2014ம் ஆண்டில் இருந்து மாடுபிடிக்க ஆரம்பித்தேன். இதற்கு முன், சிறந்த மாடுபிடி வீரராக பாறைப்பட்டியில் பைக் பரிசு பெற்றுள்ளேன். திருச்சி கருங்குளத்தில் சிறந்த மாடுபிடி வீரராக 2017ம் அரை பவுன் மோதிரமும், 2018ம் ஆண்டில் 2 பவுன் செயினும் வாங்கி உள்ளேன்.

திருப்புவனம் அருகே கடந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டில் ப்ரிட்ஜ் வாங்கியுள்ளேன். உசிலம்பட்டி ஏழுமலையில் தொடர்ந்து கடந்த 2 ஆண்டாக சிறந்த மாடுபிடி வீரராக பரிசு பெற்றேன். பரிசுகளை கிடைக்கிறது என்பதற்காக காளைகளை அடக்க மாட்டேன். ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக பிரத்தியேக பயிற்சிகள் என்று தனியாக எடுக்க மாட்டேன். போட்டி நேரத்தில் மட்டும் சில நாள் காளைகளை நண்பர்களுடன் சேர்ந்து அடக்குவேன், ’’ என்றார்.

No comments