கொரோனா.. அதிகாலையில் அடுத்தடுத்த 4 மரணங்கள்.. கோயம்பேடு வியாபாரி திடீர் பலி.. சென்னையில் அதிர்ச்சி!
கொரோனா.. அதிகாலையில் அடுத்தடுத்த 4 மரணங்கள்.. கோயம்பேடு வியாபாரி திடீர் பலி.. சென்னையில் அதிர்ச்சி!

சென்னை: கொரோனாவுக்கு சென்னையில் அடுத்தடுத்து இன்று 4 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நேற்று கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,000ஐ கடந்தது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,409ஆக அதிகரித்துள்ளது. நேற்று புதிதாக 580 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது. சென்னையில் இதுவரை 2,644 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 316 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் தொடர்ந்து கேஸ்கள் உயர்ந்த வண்ணம் இருக்கிறது.
தமிழகத்தில் நேற்று கொரோனாவால் 2 பெண்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 37ஆக உயர்ந்தது. திருவள்ளூரை சேர்ந்த 56 வயது பெண்மணி ஒருவர் பலியானார். இவர் பலியான பின்புதான் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது. அதேபோல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயது பெண்மணி ஒருவரும் நேற்று பலியானார்.
இந்த நிலையில் கொரோனாவுக்கு சென்னையில் அடுத்தடுத்து இன்று 4 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று அதிகாலை அடுத்தடுத்து 4 பேர் பலியானார்கள். இதனால் தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. அதன்படி தாம்பரத்தை சேர்ந்த ஒருவர் இன்று அதிகாலை பலியானார். அவரை தொடர்ந்து கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்து வந்த சூளைமேட்டை சேர்ந்த வியாபாரி ஒருவர் பலியானார்.
இதன் மூலம் கோயம்பேடு வியாபாரி ஒருவர் முதல்முறையாக தமிழகத்தில் கொரோனா காரணமாக பலியாகிறார். இவருக்கு கடந்த வாரம் கொரோனா உறுதி செய்யப்பட்டது. தொடக்கத்தில் கோயம்பேட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் 7.30 மணிக்கு அதே பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலியானார்.
இதில் இரண்டு பேர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். சூளைமேட்டை சேர்ந்த 80 வயதான மூதாட்டி மட்டும் தனியாக சிகிச்சை பெற்று வந்தார். இவர் கே.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த மூதாட்டிக்கு கடந்த 4ம் தேதி கொரோனா ஏற்பட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக கேஎம்சியில் 5ம் தேதி இவர் சேர்க்கப்பட்டார்.
அதேபோல் சென்னையில் கொரோனா பாதிப்புக்கு 72 வயது மூதாட்டி பலியாகி உள்ளார்.இவர் ராயப்பேட்டையை சேர்ந்தவர். அங்கு இருக்கும் திருவேற்காடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அந்த மூதாட்டியின் குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்து தமிழகத்தில் மூன்று பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
No comments